
எழுதாத பக்கங்கள்!
பருவம் தெரிந்த
நாள் முதலாய்
நாட்கள் தவறாது
நாட் குறிப்புக்கள்
எழுதிக் கொள்வது
என் பழகங்களில் ஒன்று!
அது என்ன மாயமோ
மந்திரமோ தெரியவில்லை!
உன்னோடு பேசத் தொடங்கிய
நாள் முதலாய்
பக்கங்கள் எல்லாம்
உன்னைப் பற்றிய
புராணங்களாகவே நிறைந்து போனதும்...
என் பக்கத்திலிருப்போரிடமும்
உன்னைப் பற்றிய பல்லவியாய்
கதைகள் நீண்டு போனதும்
எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்!
உன்னோடு
உயிர் கலந்த பொழுதுகள்...
சின்னச் சின்னச் சண்டைகள்...
செல்ல ஊடல்கள்...
மௌனப் போராட்டங்கள்...
கண்ணீரால் கரைந்த இரவுகள்...
இப்படி எல்லாமே
உன்னைப் பற்றியே நீளும்!
ம்!...
புத்தகத்திற்கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல...
நானும் உன் நினைவுகளை
பக்கம் பக்கமாக
பதுக்கியே வைத்திருந்தேன்!
இந்தப் பூமியெங்கும்
கங்குல் கவிழ்ந்திருக்கும் போதும்
ஊசலாடும் உன் நினைவுகளால்
என் உயிரை உடைத்து உடைத்து
உனக்கு ஓலை அனுப்பத் துடிப்பேன்!
சரி
அதை எல்லாம் விடு
இவை எல்லாம்
உனக்கெங்கே புரியப் போகிறது?
ம்...
உனக்கும் எனக்கும் இடையே
இடைவெளிகள் கூடியபோதுதான்
நாட்குறிப்பு எழுதுவதையே
நிறுத்திக் கொண்டேன் நான்!
ஆனாலும்
இப்போது நாட்குறிப்பின் பக்கங்கள்
திறக்கும் போதெல்லாம்
பவனி வரும் உன் நினைவுகளை
பேனா மை கொண்டு எழுதாமல்
கண்ணீர்த் துளிகளை மட்டும்
காணிக்கையாக்கிச் செல்கின்றேன்!
அங்கே சிதறி விழுந்த
கண்ணீர் துளிகள்தான்
கறைபடிந்து கிடக்கின்றன!
ம்!...
அந்த நிலவில் கூட
களங்கம் சொல்கிறார்கள்!
என்னால் உன் நிழலுக்குக் கூட
களங்கம் வராமல்
இன்றும் பத்தியமாய் நான்!
உன்மேலான இந்த நேசிப்பு
காதலென்று சொல்லுவதற்கில்லை
அதற்கும் பலபடி மேலாய்
பரிசுத்தமாய்...
தொடரும் இந்த நேசிப்பு
என் நெஞ்சிருக்கும் வரை நீடிக்கும்!

Help





தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?











